18 February 2004
புது வீட்டுக்கு வாங்க !
கொஞ்சம் நாட்களாக நான் காணாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நானும் ஒரு புது வீட்டிற்குக் குடி போகப் போகிறேன். புதிய வீட்டின் சீரமைப்பை ஓரளவு செய்து விட்டேன். இன்னும் இருப்பதை நாளடைவில் பார்த்துக் கொள்கிறேன். அதனால், இனிமேல் இந்தப் புது வீட்டுக்கு வாங்க எல்லோரும்.புது வீடு MovableType கொண்டு தயாரானது. இன்னும் சற்றுக் கடினமாக இருந்தாலும், ஒரு சுதந்திரம் இருப்பது போல் தெரிகிறது. புது நுட்பங்கள் கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் அமைகிறதே என்று ஒருபக்கம் எனக்கு ஆர்வ மிகுதியும் ஏற்படுகிறது.
அவசியம் வர வேண்டும். நன்றி.
09 February 2004
கருத்துக்கள், பின்னூட்டங்கள், ...
தமிழ் வலைப் பதிவுகளுக்காக அ/கே/கே அல்லது வ/கே/கே என்று அடிக்கடியும் வழக்கமாகவும் கேட்கப்படும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் தொகுத்து வைக்கும் வேலையில் இறங்கச் சிலர் சில மாதங்கள் முன்னர் முன்வந்தோம். அதில் கருத்துக்கள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், விமரிசனங்கள், என்று பலவாறாகக் கூறப்படும் பகுதி பற்றி நான் தயார் செய்ய முன்வந்திருந்தேன். ஒரு நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டதால் முன்னரே இதனை முடிக்க முடியவில்லை. அதுவே எனது அதிகாரபூர்வமான சாக்கு !!அதனை இப்போது முடித்து முதல் படியை வலையில் ஏற்றி உள்ளேன். அது பற்றிக் கருத்துக்களோ, திருத்தங்களோ இருந்தால் எனக்கோ, காசிக்கோ, ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். இல்லையெனில் இங்கு கருத்துக்கள் இட்டுச் செல்லுங்கள்.
காசி ஐயா, வேலையை முடிச்சிட்டேனுங்க. ஒழுங்கா இருக்குதுங்களா ?
07 February 2004
இங்கொரு நூலகம்
காலையில் இங்குள்ள பொது நூலகத்திற்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருந்தோம். ஏதோ Dino Math என்று எனக்கொன்றும் சுவாரசியமாய் இல்லாத நிகழ்ச்சி. ஆனால் என்ன ? குளிர்காலப் பனிக்குள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதை விட இது மேல் தான். தவிர நேரடியாய் எனக்கொன்றும் பிடிப்பில்லை என்றாலும், அங்கு தாள்களில் டைனசோர் அச்சில் வரைந்து வர்ணங்கள் பூசுவதும், வெட்டுவதும் ஒட்டுவதும், பல புதிர்கள் போடுவதும், இன்னும் அங்கிருந்த பல குழந்தைகளோடு விளையாட முடிந்த அந்தச் சூழலில் இருந்த நேரத்தைப் பெரிதும் விரும்பினார்கள் என் சிறுமிகள் இருவரும். (என்னை இவர்களுடன் விட்டு விட்டு மனைவி மட்டும் விவரமாய் புத்தகங்கள் பார்க்கச் சென்று விட்டாள் !).வருடம் முழுதும் அவ்வப்போது இது போல் சில நிகழ்ச்சிகளை இந்த இலவசப் பொது நூலகம் ஏற்பாடு செய்வதுண்டு. இன்று போலில்லாமல் அவற்றுள் பல மிகவும் நன்றாகத் தான் இருக்கும். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் இந்த நூலகத்தின் ஐந்தாவது பிறந்த நாள் விழா - கேக், மிட்டாய், இசை, ஆட்டம், என்று கொண்டாட்டம் தான். அதற்கு அடுத்த மாதம் தனக்கும் ஐந்து வயதாகிறது என்று நிவேதிதா அதனோடு ஒன்றிப் போய் விட்டாள். அந்த இசைக்குத் தக்கவாறு அவள் ஆடியபடி இருக்க, படம் பிடித்து உள்ளூர் வாரச் செய்தித்தாளில் போட்டு விட்டார்கள். அதனால், அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷம் கூடியது. ஒரு நூலகத்திற்குள், உதடு மீது விரல் வைத்து ஷ்ஷ்ஷ் என்கிற சத்தம் மட்டும் என்றில்லாமல், அத்தனை சத்தமும், சாப்பாடும், கொண்டாட்டமும் வித்தியாசமாகத் தான் இருந்தது. (ஒரு நாள் தான் என்றாலும்).
குழந்தைகளுக்கான "கதை நேரம்" ஒன்றும் ஒவ்வொரு பருவத்திலும் வாரம் ஒருமுறை இங்கு இருக்கும். பல நாட்கள் நாங்களும் சென்றுவிடுவது உண்டு. சுமார் அரை மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் ஒரே வடிவத்தில் தான் இருக்கும். கதை சொல்பவர் ஒரு இரண்டோ மூன்றோ குழந்தைகள் புத்தகம் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார். அதை அப்படியே சற்று ஏற்ற இறக்கங்களோடும் புத்தகத்திற்கேற்ற சத்தங்களோடும் படிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் குழந்தைகள். அதிலும் சில துடுக்குத் தனமாகக் கேள்விகள் எல்லாம் கேட்கும். அந்தப் புத்தகத்திற்கு இடையில் ஓரிரு நிமிடங்கள் சிறிது பாட்டும் நடனமும் (அவர்களைத் தூங்க விடாமல் இருப்பதற்காக என்று நினைக்கிறேன் !!). முடிவில் அந்தக் கதையை ஒட்டிச் செய்த கைவினைப் பொருள் ஏதேனும். (இப்படியாய் என் பெண்கள் வீட்டில் சேர்த்த குப்பைகள் நிறைய ! அவர்களுக்குத் தெரியாமல் வேறு கழிக்க வேண்டுமே !!)
இவை தவிர இந்த நூலகங்களில் இலவசமாகத் திரைப்படங்கள் கூட எடுத்துப் பார்க்க முடிவது ஒரு வசதி. திருமணமாகி இங்கு வந்த புதிதில், ஆஷ்லாண்டு, ஹன்டிங்டன் என்னும் கென்டக்கி/மேற்கு வர்ஜீனியா மாநிலங்களின் குக்கிராமங்களில்(!) நாங்கள் இருந்த போது, இந்த நூலகங்களும், அங்கு கிடைக்கும் திரைப்படங்களும் தான் பெரும் பொழுதுபோக்காக இருந்தது எங்களுக்கு. இப்போதெல்லாம் இந்த நூலகத்தில் DVDக்கள் கூடக் கிடைக்கின்றன. இன்று தேடிக் கொண்டிருந்த போது மூன்று இந்திப் படங்களும் (நமக்குத் தான் இந்தி தெரியாதே!), ஒரு தமிழ்ப் படமும் (பாபா தான் பார்த்து விட்டோமே!) கூடக் கண்டேன். ஆனால் ஒன்றும் எடுத்து வரவில்லை. இந்தியத் திரைப் படங்கள் கூட வைத்திருக்கிறார்களே என்பது சுவாரசியமாய் இருந்தது.
சந்தேகம் வேண்டாம். இவையெல்லாம் இன்றி நூலகங்களுக்கே உரித்தான புத்தகங்களும் இங்கும் உண்டு தான். ஆனால் நான் தான் எதையும் எடுப்பதில்லை. எடுத்தாலும் இரண்டு மூன்று வாரங்கள் சும்மா வைத்திருந்து விட்டு திருப்பிக் கொடுத்துவிடுவது வழக்கம் !! அதற்கு எடுக்காமலேயே இருந்து கொள்ளலாம் அல்லவா.
அமெரிக்காவில் இப்படி ஒவ்வொரு ஊரிலும் அது எவ்வளவு சிறிதாய் இருந்தாலும் அங்கு நூலகங்கள் இருப்பது நன்றாக இருக்கிறது. மக்களுடைய வீட்டு வரிப் பணத்தில் ஒரு சிறு பங்கைப் பெற்றுக் கொண்டு இலவசமாக எல்லோருக்கும் பொதுவான சேவையைச் செய்கிறார்கள். எங்களூரில் வீட்டு வரியில் சுமார் 4% நூலகத்திற்கும், 65% பொதுப் பள்ளிகளுக்கும் செல்கின்றன. அந்த வரிப்பணம் கூடச் சரியாய் எதற்குச் செலவிடப் படுகிறது என்று தெரிவதும் மிக நன்று.
ஈரோட்டிலும் ஒரு பொது நூலகம் இருந்தது. நடுநிலை/உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற காலத்தில் நானும் அங்கு உறுப்பினராகச் சேர்ந்திருந்தேன். மரப்பாலத்திற்கு அருகே மண்டபம் வீதியில் ஒரு மாவரைக்கும் இயந்திரம் இருந்த கடைக்கு மேலே தான் இருந்தது அந்த நூலகம். அருகே செல்லும் போது அரைக்கப் படும் பொடிகளுக்குத் தக்கவாறு ("மொளகுபொடி", கொத்தமல்லிப் பொடி, அரிசி, இராகி, கோதுமை மாவு, இத்யாதி) மசாலா வாசம் ஆளைத் தூக்கும். அதில் அப்படியே மிதந்து போய், ஓரத்தில் இருக்கிற சுழல் படிக்கட்டு வழியாய் மேலே சென்றால் அந்த நூலகம். அது மிகப் புராதன கட்டிடமாய் இருக்க வேண்டும். அது போன்ற சுழல் படிக்கட்டுக்களை அந்தப் பகுதியில் அதிக இடங்களில் நான் பார்த்ததில்லை. பல புத்தகங்களை அங்கு எடுத்துப் படித்திருக்கிறேன்.
இம்முறை பயணத்தின் போது, வீட்டில் சும்மா இருந்த ஒரு வார இறுதியின் மதியம் கடைவீதி வரை சென்றவனுக்கு அந்த நூலகம் இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஆசை வந்து விட்டது. செல்லும் வழி எனக்கு மறக்கவில்லை. அந்த மாவரைக்கும் கடையும் அங்கிருந்து வரும் மணமும் கூட மாறவில்லை. அட... அந்த நூலகம் கூட இன்னும் இருக்கிறது. புதிதாய்ப் பெயர்ப் பலகையும் அருகே ஆயிரம் ரூபாய் கொடுத்த புரவலர்கள் பட்டியலும். அப்படி ஒன்றும் அந்தப் பட்டியல் நீளமாய் இல்லை. ஒரு ஐந்தாறு பேர் தான் இருந்திருக்கும். நானும் கூடப் புரவலனாகி விடலாம் என்று தான் எண்ணினேன். ஆனால் நூலகம் திறந்திருக்கவில்லை. திரும்பச் செல்ல எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.
நிச்சயம் அடுத்த முறை என்று எண்ணிக் கொண்டேன். உள்ளே சென்று வர முடியவில்லையே என்ற ஏக்கம் மிதமாய் ஏற்பட்டாலும் பல நிகழ்வுகளுக்கிடையே அது தொலைந்தே தான் போனது.
04 February 2004
செம்பருத்தியும் செவ்வந்தியும்
பூக்கள், செடி கொடிகள், மரங்கள், இவற்றைப் பற்றிய அறிவு பெரிதாய் இல்லாத சிறுநகரவாசி ஆக வளர்ந்தவன் நான். ஒரு முறை ஒரு கிராமத்திற்குச் சென்ற போது சோளத்தட்டைப் பார்த்து, "இது என்ன அரிசிச் செடியா ?" என்று நான் கேட்டதாகப் பல நாள் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். இன்னும் கூட எனக்கு வயலில் நெல்லுக்கும் சோளத்திற்கும் வித்தியாசம் எல்லாம் தெரியும் என்று நான் நம்பவில்லை.இம்முறை ஊர் சென்றிருந்தபோது ஒருநாள் மூன்றும் ஐந்துமான மக்களிடம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். "குட்டி இது என்ன பூ தெரியுமா ? வெள்ளையாய் இருக்கில்லையா - அதனால் இது வெள்ளைப்பூ" !!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் கேட்டறியாத அமெரிக்க மகள் சற்றே சந்தேகமாக என்னைப் பார்த்தாள். "பறிச்சு மேலிருந்து போட்டால், Fan மாதிரி சுத்துது பார், அதனால் இது White Fan பூ", என்று மேலதிக விளக்கங்கள் வேறு! "வெள்ளக் காத்தாடிப் பூ" என்று (கொங்குத்) தமிழில் சொல்லியிருந்தால் புரியாமல் போயிருக்கும். இப்போதும், என்னவோ வேடிக்கையாய் இருந்தது என்று மட்டும் புரிந்துகொண்டு பெரியவள் சிரித்துவிட்டுப் போனாள். குத்திய காது வழியை மறக்கடிக்க நான் விரித்த இந்தப் பூக்கதை வலையில் மெல்ல விழுந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாய்த் தோடணிந்த என் சிறியவள்.
என்னவோ தெரியவில்லை. இந்தச் செம்பருத்திப் பூவின் மீது மட்டும் எனக்கு ஒரு தனிப் பிரியம். அதற்குக் காரணம் ஒருவேளை அத்தனை கடும் பச்சை இலைகளுக்கு ஊடே தனியாகத் தெளிவாகத் தெரியும் கெட்டிச் சிவப்பு நிறமோ ? என்னவோ மற்ற பரவலான பூக்களை விட அசல் தமிழ்ப்பெயர் கொண்ட பூ இது என்பதாய் எனக்கு எண்ணம். கூடவே தாவரவியல் பாடத்தில் Hibiscus Indica (?) என்கிற கவர்ச்சியான(!) அறிவியற் பெயரும். செம்பருத்தி என்றாலே மனசுக்குள் மிருதுவான ஒரு உணர்வு.
என்னுடைய முதல் மகளுக்குக் கூட முதலில் செம்பருத்தி என்று பெயரிடலாம் என்று கொஞ்ச நாள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அதை Semparuththi என்று எழுதி அதனால் இந்த ஊர்க்காரர்கள் படப் போகும் அவஸ்தையை எண்ணி அவ்வெண்ணத்தைக் கை விட்டு விட்டேன். (இப்படியொரு பெயரை நான் மனதுக்குள் யோசித்த போதே இல்லத்தரசி வெட்டி விட்டாள் என்பது வேறு விஷயம் !)
முதன் முதலில் ஈரோட்டில் ஒரு பள்ளி நண்பன் வீட்டில் தான் செம்பருத்திப் பூவை நான் அறிமுகம் செய்து கொண்டதாய் ஞாபகம். முதல் மாடி வாடகை வீட்டில் இருந்த எங்களுக்குப் பூ என்றால் சட்டியில் வைத்த மேஜை ரோஜாவும், வயலட் நிற டிசம்பர் பூவும் தான். ஆனால் நண்பன் வீட்டைச் சுற்றி மதில் சுவருக்கு உட்புறம் முழுவதுமாய் செடி கொடிகள். முன்வாசலுக்கு வலது புறம் அருகருகே இட்லிப்பூவும் என் இதயம் கவர்ந்த செம்பருத்தியும்.
செம்பருத்திப் பூ வரவேற்கும் எந்த வீடும் எனக்குப் பிடித்திருக்கிறது.
காரணம் தெரியாமல் எனக்குப் பிடித்த இன்னொரு பூ - செவ்வந்திப் பூ. அதற்குக் காரணம் தெரியவில்லை என்பது மட்டுமல்ல. அதை நான் பார்த்ததாகவும் நினைவில்லை. ஏதாவது பாட்டில் கேட்டிருப்பேனோ ? கதையில் படித்திருப்பேனோ ? இருக்கலாம். இரண்டு வருடத்திற்கு முன்னர், சரி நாமும் இனிக் கவிதைகள் என்று மீண்டும் ஏதேனும் எழுதலாம் என்று எண்ணியபோது முதல் தகுதியாய் ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் (!!!) என்று எண்ணினேன். அதற்கு நான் தேர்ந்தெடுத்த பெயர் - "செவ்வந்தி". மீண்டும், ஏன் என்று யாரும் காரணம் கேட்காதீர்கள்! எனக்கும் தெரியாது.
ஓ ! செவ்வந்தி எத்தனை கவிதை எழுதினார் என்றும் யாரும் கேட்டு வைக்காதீர்கள். பூஜ்யப்பூ தான்.
பூக்கள் பற்றி அதிகம் தெரியாது என்று இருந்தாலும், எழுத ஆரம்பித்ததும் இன்னும் கொஞ்சம் பூவிவரங்கள் எனக்கும் கூட எட்டுகின்றது என்பது ஆச்சரியமான விஷயம் தான். பட்டியலில் அடுத்ததாகப் பிடித்த பெயர்களாய் செண்பகப்பூவும் செந்தூரப்பூவும் எட்டிப் பார்க்கின்றன. "செ"வில் ஆரம்பிப்பதால் தான் இவை எல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியாமலே பிடிக்கிறதோ ?
புதுப்பாளையத்துப் பொடக்காலியில் (புழக்கடை) சலதாரைத் தண்ணீர் பாய்ந்து வளர்ந்த மல்லிகைச் செடி கூட நினைவுக்கு வருகிறது. உதிரியாய் மல்லியும் முல்லையும் நூலில் சரமாய்க் கட்ட நான் கூடச் சில சமயம் முயன்றிருக்கிறேன். ஆனால், ஊசி வைத்துக் கோர்ப்பது தான் எனக்குச் சுலபமாய் இருந்திருக்கிறது. திருமணமான புதிதில் எனக்குப் பிடித்தவை மல்லியும் முல்லையும் என்றிருந்தேன் மனைவியிடம். அவள் வீட்டுச் செடிகளில் இம்முறை மந்தாரையும் சிவனுக்கு உகந்த மஞ்சள் சங்குப் பூவும் கண்டேன்.
செயற்கையாய்த் தலையில் எதையேனும் மாட்டிக் கொண்டிருக்கும் இங்கிருந்து ஊர் சென்ற என் பெண்கள் ஆசையாய்ப் பல பூக்களைத் தலையில் சூடிக் கொண்டார்கள். அவற்றுள் கனகாம்பரமும் ஒன்று. பூச்சூடிப் பொட்டும் வைத்துப் பூரித்த முகத்தோடிருந்த பெண்களின் அழகைக் கண்டு மனம் மகிழவே அடிக்கடி ஊருக்குப் போக வேண்டும் போலிருக்கிறது.
"ஐய, இது நல்லாவே இல்ல", என்று தன் அம்மா சொன்னதையும் கேட்காமல், காருக்கு முன்விளக்குகள் போலே காதுக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் ரோஜாவை அணிந்துகொள்வேன் என்று அடம் பிடித்தபடி பெண் முக மலர்ச்சியோடு தானே காராக மாறிப் போன நேரங்களும் இனிமையானவை.
"அட, விடு. அதனால என்ன ? அவ ஆசப்படற மாதிரி வச்சுக்கட்டுமே..."
குழந்தைகளிடம் கிறுக்குத்தனமான செய்கைகளுக்கும், கோணங்கித் தனங்களுக்கும், வேடிக்கை காட்டுவதற்கும் என்றும் தயக்கமில்லாத ஒரு அப்பன் நான். எனது சிறு வயதுப் படம் ஒன்றில் எனக்கும் கூட ரிப்பன் கட்டிக் குடுமி போட்டு... ஹ்ம்ம்... பூ வைத்திருந்தார்களா நினைவிலில்லை. முதல் மொட்டைக்கு முன் எடுத்த படம் கண்ணாடிச் சட்டம் போட்டு வீட்டில் எங்கோ உட்கார்ந்திருக்கிறது.
டிசம்பரில் இரண்டு நாள்ப் பயணமாய் ஈரோட்டில் இருந்து இரயிலில் பெங்களூருக்குக் கிளம்பினோம். ஆறேழு பேராய் அதிகாலையில் அவசரமாய் கிளம்பிச் சென்று பெட்டியில் அமர்ந்த பின் வண்டி கிளம்பியது. சிறிது நேரம் கழித்துத் தான் கவனித்தேன். எனது பெண்களின் தலையில் அவ்வளவு அழகாகப், புதிதாக, வெள்ளையாக, அருமையாக ஒரு பூ. அவர்கள் அருகில் வந்த போது, ம்ம்ம்ம் என்னே ஒரு இனிய வாசம்! அடர்த்தியாக இருந்து அழகைக் கூட்டிய அது என்னவாய் இருக்கும்? என்னவோ சாமந்தி என்பார்களே... ஒருவேளை அதுவோ என்று எண்ணியபடி கேட்டேன். "இல்லை செல்வா, இது செவ்வந்திப் பூ" என்ற பதில் கிடைத்தது.
"ஓ, இதுதான் செவ்வந்தியா ?"
எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே எனக்குப் பிடித்திருந்த ஒரு பூவை, பெயர் தெரியாத போதே எனக்குப் பிடித்திருந்தது என்பதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது.
01 February 2004
தமிழோடைத் திரட்டி
எனது திரட்டிப் பக்க முயற்சி.தமிழ் வலைக்குறிப்புக்கள் அதிகமாகி வரும் இன்னாளில், புதிதாய் யார் எழுதியிருக்கிறார்கள் என்று அதிக நேரம் விரையப்படுத்தாமல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முதலில் வலைக்குறிப்பர்கள் தங்களது பக்கங்களுக்கு செய்தியோடை ஏற்பாடு செய்ய வேண்டும். Blogger-ல் இப்போது அந்த வசதி தரப்பட்டுள்ளது.
இரண்டாவது, செய்தியோடைத் திரட்டிகள் கொண்டு பிறரது தளங்களைக் கவனித்துக் கொள்ளலாம். அவரவர் தனித்தனியாக செய்தியோடைத் திரட்டிகள் வைத்துக் கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் NewsMonster போன்று அவரவர் மேசை மீது இருக்கலாம். அல்லது Bloglines போன்று இணையச் சேவையாய் இருக்கலாம். இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் அவரை நாமாகச் சேர்க்க வேண்டும். அதோடு திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் (அவரவர் விருப்பம் பொருத்து). இதற்கு பதிலாக தமிழ் வலைப்பக்கங்கள் போலே எல்லோருக்கும் பொதுவான ஒரு இணையப் பக்கமாய் திரட்டித் தளம் இருந்தால், யாராவது ஒருவரோ, நிர்வாகிகள் என்று சிலரோ, ஒரு இடத்தில் புதிய ஓடையைச் சேர்த்து விட்டால் போதும். எல்லோரும் பார்த்துக் கொள்ளலாம்.
இப்படியான ஒரு முயற்சியைத் தான் வெங்கட் இங்கே செய்திருக்கிறார். ஆனால், அதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். யூனிகோடு குறியீட்டைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் கூறியிருந்ததைப் போல, பத்ரியின் ஓடை எனக்குச் சரியாகப் பாயவில்லை. யூடிf-இன் மூன்று பைட்டுக்கள் ஒன்றொன்றாகக் குதறித் தான் தென்படுகிறது.
அவரைப் போன்றே கடந்த பல மாதங்களாக நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். BlogStreet தரும் சேவை ஒன்றையொட்டி அமைந்த எனது முயற்சியை இங்கே காணலாம். இங்கும் நன்றாகத் தெரிவது வெங்கட்டின் ஓடை மட்டுமே. பிற ஓடைகள் எல்லாம் அதே பைட் குதறல்களுக்கு ஆளாகிக் காணாமல் போகின்றன. ஆங்கில எழுத்துக்களோ, அல்லது எண்களோ இருந்தால் மட்டும் தெரிகிறது. கண்ணனின் "வைகைக்கரைக் காற்றே" வெறும் ...32, ...33 என்று தெரிவதைக் கவனியுங்கள்.
அதோடு Atom ஓடைகளை BlogStreetற்கு இன்னும் அடையாளம் காணத் தெரியவில்லை. BlogStreet-ல் தனக்குள்ள தொடர்பை வைத்து பத்ரி தான் இந்த வசதியை அவர்கள் ஏற்படுத்தித் தருமாறு செய்ய வேண்டும். Bloglines மக்கள் கூட ஒரு மாதம் முன்னர் தான் இந்த வசதியைச் செய்திருக்கிறார்கள். அது ஏற்பட்டால் அப்புறம் திரட்டிப்பக்கம் வந்தாலே போதும் - புதிய பதிவுகளைப் படிப்பதற்கு. அதற்குள் வெங்கட் ஏதேனும் Magic செய்யவும் கூடும். இப்போதைக்கு அதற்கும் Atom ஓடைகளைப் படிக்கத் தெரியவில்லை என்று எண்ணுகிறேன்.
இவை இரண்டில் ஒன்று செயல் படுத்த முடிந்தாலும் நல்லது தான்.