<$BlogRSDUrl$>

என் எண்ணக் கிறுக்கல்கள்...!

Tamil blogs of Selvaraj in Unicode format

30 November 2003

ஆத்தாவும் தொலைபேசியும் 

சிறு வயதில் அம்மாயி என்று அழைத்த ஞாபகம் இருக்கிறது. மழை பொய்த்து விவசாயத்திற்குப் பெரு வரவேற்பில்லாத புதுப்பாளையம் கிராமத்தை விட்டு வேறு பிழைப்புத் தேடி அம்மா/அப்பா, மாமா எல்லோரும் ஈரோட்டிற்குக் குடி பெயர்ந்து விட்ட சமயம். அம்மாயி அவ்வப்போது ஊரில் இருந்து பலகாரங்களுடன் வந்து போன நாட்கள் புகைப்படலமாய் நினைவில். எனக்கு வயது நான்கோ, ஐந்தோ இருக்கலாம். காலப்போக்கில் அம்மாயி/அப்பச்சியும் ஊர்ப்பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து விட்டனர். அம்மாயியாத்தா சுருங்கி ஆத்தா என்று ஆகிவிட்டது. எதுகையாய்க் கூடவே அப்பச்சியும் (அம்மாவிற்கு அய்யன்) தாத்தா ஆகிவிட்டார்.

அமெரிக்கா வந்த பிறகு ஆறு மாதத்தில் தாத்தா காலமாகி விட, அதன்பிறகு ஊர் சென்ற போதெல்லாம், தாத்தா இல்லாது தனித்திருக்கும் ஆத்தாவிடம் அது ஒரு மனக்குறையை, வெறுமையைத் தந்திருப்பதை உணர முடிந்தது. சமீப காலத்தில் ஆத்தாவுக்கும் உடல்நிலையில் சற்றுத் தளர்வு. பல ஆண்டுகளாய் இருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொலைபேசியில் பேசக் கூட எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிவதில்லை.

எப்போதுமே ஆத்தாவுடன் தொலைபேசியில் பேசும் அனுபவம் சுவாரசியமானது. அதிக பட்சம் பேச்சு மூன்று நான்கு நிமிடங்கள் தான் இருக்கும். வாரம் ஒருமுறையானாலும் சரி, மாதம் ஒருமுறையானாலும் சரி பெரும்பாலும் பேசும் விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். முக்கியமாய், எப்போது ஊருக்கு வருகிறேன் என்கிற கேள்வி மட்டும் அவர்களிடம் எப்போதும் இருக்கும்...

"ஹலோ ஆத்தா, எப்படி இருக்கீங்க ?"
"ஹலோ...ஹலோ..."

மறுமுனைக்கு என் பேச்சொலி சென்றிருந்தாலும் ஆத்தாவின் காதினில் இன்றிக் காற்றினில் கரைந்து விட்டிருக்கும். தொலைபேசியின் வாய்ப்பகுதியைச் சுற்றிக் கையைக் குவித்துக் கொண்டால் ஒலி சிதறாது என்று மீண்டும் சத்தமாய்,

"ஹலோ, ஆத்தா எப்படி இருக்கீங்க... நான் செல்வராஜ் பேசறேன்..."
"செல்வராசா ? நல்லாத்தான் இருக்கறனாயா. நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க ?"

பின்னணியில் "ஃபோனக் காதுல வச்சுப் பேசுமா" என்று அம்மாவின் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

"..."
"இப்போ அங்க மணி எத்தன ?
"காலையில மணி 10 ஆச்சுங்க ஆத்தா"
"காலையிலயா ? இப்பத் தான் இங்க ராத்திரி..."

ஒவ்வொரு முறை பேசும் போதும் ஆத்தாவுக்கு இது தீராத வியப்பு. அமெரிக்காவிற்கு என்னை வழியனுப்பச் சென்னைக்கு வந்ததைத் தவிர, தான் பிறந்து, வளர்ந்து, புகுந்த ஊர்களை விட்டு அதிக பட்சம் சுமார் 100 மைல் சுற்றளவைத் தாண்டிப் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. பூமியின் வடிவமும் சுழற்சியும், இரவு பகல் மாறி மாறி வரும் தன்மைகளும் சற்றுப் புரியாத பரிமாணங்களாய் இருந்திருக்கலாம். ஆத்தா என்றில்லை இன்னும் பல பேர் "இப்போ அங்க மணி எத்தன?" கேள்வியைக் கேட்டு வியந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

தனது (கொள்ளுப்) பேத்திகளைப் பற்றிப் பேச்சுத் திரும்பும். "பொண்ணுங்க நல்லா இருக்காங்களா ? வளந்துருக்காங்களா ?"

இரண்டரை வருடங்களுக்கு முன் குழந்தைகளைப் பார்த்ததற்கும் இப்போதைக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். நேரில் செல்லத் தான் தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஒரு தொடர் படம் (விடியோ) செய்து அனுப்பினால் பார்த்து மகிழ்வார்களே என்று எனக்குள் பல நாட்களாய் எண்ணம். இரு வருடங்களாய் எடுத்த படங்களை வெட்டி ஒட்டி வேலை செய்து கொண்டும் இருந்தேன். இன்னும் பட நாடாவில் கொஞ்சம் இடம் இருக்கிறது. பெண்களின் முறையே ஐந்து, மூன்று வயதுக் கொண்டாட்டங்களையும் பதிவு செய்து மொத்தமாய் அனுப்பிவிடலாம் என்றோ வேறு காரணங்களாலோ இது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

ஆத்தாவிற்கு என்ன வயது இருக்கும் ? யாருக்கும் சரியாய்த் தெரியாது. பிறந்த நாள், தேதி, கிழமை - ம்ஹும் வாய்ப்பே இல்லை. என் அம்மாவிற்கே வயது என்ன என்பதற்கு, என் வயதையும், அம்மா-அப்பா திருமணத்தின் போது அவர்களுக்கு என்ன வயது என்பதையும், அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன் என்பதையும் வைத்துத் தான் கணிக்க முடியும். குத்துமதிப்பாக, இந்த முறையினை இன்னும் கொஞ்சம் வளர்த்தால், ஆத்தாவின் வயதைச் சுமார் 75, 80 என்று சொல்லலாம்.

கிராமத்தை விட்டு நகரத்தின் பக்கம் வந்த போது தனது வயதில் பாதிக்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். உடல் வலுக் குறையாத வயதில் ஆத்தா எல்லா வேலைகளையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன். எனது பள்ளிக் காலங்களில் அதனைக் கண் கூடாகப் பார்த்தும் இருக்கிறேன். உடல் முடியாத போதும் மனம் அயராமல் எதையாவது செய்ய முற்பட, அம்மா முதலானோர் "நாங்க பாத்துக்கறோம். நீ கம்முனு இரும்மா" என்று கூறவும் கேட்டிருக்கிறேன். உடலை வருத்திய சர்க்கரை நோய் நிலை பற்றியும் பேச்சுத் தவறாமல் இருக்கும்.

"உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு ? டாக்டர் கிட்டப் போனீங்களா ?"
"எதோ இந்த எட்டுக்குக் கொஞ்சம் தேவுலைப்பா. சக்கரைக்கு மாத்திரை கேக்க மாட்டீங்குதுன்னு டாக்டரு தெனமும் ஒரு ஊசி போடச் சொல்லிட்டாரு. அத்தை தான் போடறா. அதனால இப்பக் கொஞ்சம் பரவாயில்ல"
"..."

"சரி... எப்ப ஊருக்கு வர்றீங்க ?"
"அ...அது... இன்னொரு நாலஞ்சு மாசமாவது ஆகுங்காத்தா "

இந்த வருடக் கடைசி வரை வர இயலாது என்று கூற எனக்கு மனம் வராது. சென்ற வருடம் செல்ல முடியாமல் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிந்த போதும் "குறைந்தது நாலு மாதம்" என்பது தான் என் பதிலாய் இருக்கும். அதற்கே அவர்களின் பதில்,
"இன்னும் நாலு மாசமா ?" என்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.

சமீபத்தில் ஊர்ப்பயணத் திட்டங்கள் உறுதியாகி விட்டன. நான்கு வருடங்களுக்குப் பிறகு டிசம்பர் முதல் வார இறுதியில் ஊர்ப் பயணம். தொலைபேசியில் இம்முறை கேள்விக்குக் காத்திருக்கப் போவதில்லை.

"ஆத்தா, டிசம்பர் மாசம் ஊருக்கு வரோம். இன்னும் ரெண்டே மாசம் தான். டிக்கட் எல்லாம் கூட வாங்கிட்டோம்"

சுருங்கிய தோலும், குழி விழுந்த கண்களும், நரை கலந்த தலையுமாக இருந்தாலும், அவற்றின் ஊடே பார்வையில் பாசமும், முகத்தில் வாஞ்சையுமாய் இருக்கும் ஆத்தாவைப் பார்த்த உடனே போய்க் கட்டிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் அவர்களால் இரயில் நிலையம் வர முடியாதோ ? இயலாது எனில் வீட்டிற்குச் சென்றவுடன் முதல் வேலை அது தான். எனது முகத்தைப் பிடித்துப் பார்த்துப் பரவசப்படும் அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறது. எப்போதும் நேராக நீளாமல் நடு முழியில் மடங்கிக் கிடக்கும் (இடது?) கைச்சுண்டு விரல் இன்னும் அப்படியே தான் இருக்கிறதா என்று தடவிப் பார்க்க வேண்டும்.

அது தான் இன்னொரு மாதத்தில் ஊருக்குப் போகப் போகிறோமே, அதனால், அந்தத் தொடர்படத்தைக் கூட நேரில் போகும் போது எடுத்துக் கொண்டு போய் விடலாம். "இது என்ன, அது இந்த இடம்" என்று வர்ணனையோடு உடன் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அதை இன்னும் நான் அனுப்பவில்லை. அன்றாட வாழ்க்கை இரைச்சல்களில் மூழ்கிச் சில நாள் அதை நான் மறந்தும் போனேன் என்பதும் உண்மை.

ஆத்தாவுக்கு உடன்பிறந்தவர்கள் பல பேர். சிதறித் தொடர்பற்றுக் கிடப்பவர்கள், சின்ன வயதில் இறந்து போனவர்கள், தான் வளர்த்த தமக்கையின் வாரிசுகள், என்று உறவு மரம் விரிவானது. எனக்குத் தான் சொந்தங்கள் எதுவும் சரியாய்த் தெரியாது. சென்ற முறை சென்றிருந்த போது விரிவாய் ஒரு சிலேட்டும் கையுமாக ஆத்தாவிடம் கேட்டுப் படம் போட்டுத் தெரிந்து கொண்டது நினைவில் இருக்கிறது. ஒழுங்காய் எழுதி வைக்காதது நான்கு வருட இடைவெளியில் எல்லாம் மறந்து விட்டது. இம்முறை எல்லாவற்றையும் நன்கு ஆவணப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். உறவுகள்/குடும்ப மரம் ஒன்று வரைந்து கொள்ள வேண்டும். தனது கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பது அவர்களுக்கும் ஒரு சந்தோஷத்தைத் தரும் விஷயமாய் இருக்கலாம் என்பதாலும் இந்த முனைப்பில் எனக்கு ஆர்வம்.

ஆயிற்று... இன்னும் ஒரே வாரம் தான். அடுத்த சனிக்கிழமை கிளம்பி ஊர் சென்று விடலாம். இவ்வளவு நாள் தாமதமானால் என்ன ? ஆறு வார விடுப்பில் செல்வது அனைவருக்கும் நன்றாய் இருக்கும். இடையில் இந்த வாரத்தில் நான்கு நாட்கள் விடுப்பு இருக்க, வெளியூர் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது தொலைபேசியில் ஒரு செய்தி சேர்ந்து இரண்டு நாட்களாகக் காத்திருந்தது.

"உடல்நலக் குறைவு அதிகரித்து ஆத்தா நேற்றிரவு 11.50 க்குக் காலமாகி விட்டார்கள்"

அதிர்வாய் இருந்தது. கண்களில் நீர் வரவில்லை. மெலிதான ஒரு சோகம் மரத்துப் போன உணர்வுகளில் கலந்தது. இன்னும் பத்து நாட்களில் சென்றிருப்போமே... நான்காண்டுகள் பொறுமையாய் இருந்த இயற்கைக்கு இப்போது அப்படி என்ன அவசரம் ? தெரியவில்லை. காரணம் புரியவில்லை என்றாலும் இயற்கையின் நியதிகளை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை...

அன்புள்ள என் ஆத்தாவிற்கு எங்களின் இதயம் நிறைந்த அஞ்சலி.

25 November 2003

யூனிகோடும் UTF-8 முறையும் 

யூனிகோடு மற்றும் UTF-8 குறியீட்டு முறைகள் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கணிணிகளின் பயன்பாட்டுக்கு எப்படி அமெரிக்க ஆஸ்கி முறை ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்களை அடையாளம் காட்டுகிறதோ, அதுபோல யூனிகோடு உலக மொழிகள் அத்தனையிலும் உள்ள எழுத்து வடிவங்களுக்கும் உரிய ஒரு எண்ணைக் கட்டிச் சேர்த்து வைக்கும் பெரிய அண்ணன். உதாரணத்திற்கு 65 என்றால் 'A', '97' என்றால் குட்டி 'a' - இது ஆஸ்கி. ஒரு பைட்டுக்கு ஒரு எழுத்து என்று ஆங்கிலத்திற்கு மட்டும் 128 இடங்களுடன் அது போதுமானதாய் இருந்தது. ஏன் மிச்சம் ஒரு பிட் கூட இருந்தது. (இன்னொரு 128 இடங்கள் = விரிவு ஆஸ்கி). ஆனால் எல்லா மொழிகளையும் உள்ளடக்க இது போதுமானதாய் இல்லை. சரி, ஒன்றிற்கு இரண்டு பைட்டுகள் என்று (16 பிட் = 65536 இடங்கள்) எடுத்துக் கொண்டால் இது சாத்தியமாகும் என்று யூனிகோடு முயற்சிகள் ஆரம்பமாயின. இப்போது சில சீன, கொரிய, ஜப்பானிய எழுத்துக்களின் தேவைக்காக 4 பைட் வரை (32 பிட்) எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு வந்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மொழிகளை இன்னும் இரண்டு பைட்டுக்களுக்குள் அடக்கி விடலாம்.

0 முதல் 65535 வரையில் சாத்தியமான எண்களில், தமிழ் எழுத்துக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்கள் 2944 முதல் 3071 வரை. இதையே U+0B80 முதல் U+0BFF வரை என்றும் கூடச் சொல்லலாம். இது பதினாறாம் அடிப்படையில் இருக்கும் இலக்க முறை (hexa decimal system representation). இந்த எண்களை இரண்டு பைட்டுக்களில் அடக்கி விடலாம். பதினாறு பிட்டுக்கள் போதும். எல்லா யூனிகோடு எழுத்துக்களையும் இரண்டு பைட்டுக்களுக்குள் அடைத்து விட முடியுமா எனில் அதில் சில இடைஞ்சல்கள். முதலில் பழைய ஆஸ்கி எழுத்துக்கள். அவை நீண்ட காலமாக ஒரு பைட் கொண்டே பயன்படுத்தப் பட்டன. அதனால் அதே முறையில் இருந்தால் தான் வசதி. இரண்டாவது, புதிய 4 பைட்டுக்கள் தேவைப்படும் சீ.கொ.ஜ (சீன, கொரிய, ஜப்பானிய) எழுத்துக்களை இரண்டு பைட்டுக்களில் அடக்க முடியாது.

இந்தச் சிக்கல்களை நீக்க ஒரு குறியீட்டு முறை வேண்டும் என்று பிறந்தது தான் UTF-8 முறை. இன்று இந்த முறை பரவலாகிக் கொண்டு வருகிறது. எந்த ஒரு யூனிகோடு எழுத்தையும் குறிக்க, ஒன்று முதல் நான்கு வரையிலான பைட்டுக்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கீழ் ஆஸ்கி எனப்படும் ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு பைட். மற்றவற்றிற்கு இரண்டோ மூன்றோ அல்லது நான்கோ. கீழே இருக்கும் பிட் அமைப்பைக் காண்க. ஒன்றும் பூஜ்யமும் மாறாதவை. 'b' என்றிருக்கும் இடங்கள் ஒன்றையோ பூஜ்யத்தையோ கொண்டிருக்கலாம்.


0bbbbbbb
110bbbbb 10bbbbbb
1110bbbb 10bbbbbb 10bbbbbb
11110bbb 10bbbbbb 10bbbbbb 10bbbbbb


தமிழ் எழுத்துக்கள் எல்லாமே (16 பிட்டுக்கள் போதும் என்றாலும்) இந்த முறைப்படி மூன்று பைட்டுக்கள் (24 பிட்டுக்கள்) கொண்டு அமைக்கப் படும். ஆனால், இன்னும் பல செயலிகளும், பழைய செயலிகளும் மூன்று மூன்று பைட்டாகச் சேர்த்து ஒரு எழுத்தாய்ப் பார்க்காமல், தனித்தனி பைட்டாகப் பார்ப்பதால், சில சமயம் எதிர்பாராத விதமாய்த் தமிழ் எழுத்துக்கள் குதறப் பட்டு கிறுக்கல்களாய்த் தெரியும்.

மனஓசை சந்திரவதனாவின் 16 November 2003 தேதிய இந்தப் பதிப்பைப் பாருங்கள். இந்த பைட் குதறல்களின் விளைவு இப்படி இருக்கிறது.

à®®à¯..... விடிநà¯à®¤à¯ விடà¯à®Ÿà®¤à®¾..?
நேறà¯à®±à¯ à®®à¯à®©à¯ தினம௠அஸà¯à®¸à¯†à®®à¯à®ªà®¿à®²à®¿ மீறà¯à®±à®¿à®™à¯. வீட௠வநà¯à®¤à¯ சேர நேரமாகி விடà¯à®Ÿà®¤à¯. வழமையில௠வரà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ ஒர௠நாளà¯à®¤à®¾à®©à¯ இபà¯à®ªà®Ÿà®¿ அடà¯à®Ÿà®•à®¾à®šà®®à®¾à®• இர
இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால்
எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை


என்னுடைய யூனிகோடு UTF-8 ஆராய்ச்சியும் முயற்சியும் கொண்டு என்னால் முடிந்த அளவு அவர் இழந்த பதிப்பை இப்படி மீட்டிருக்கிறேன். முழுவதையும் அவருக்கு மின்மடல் வாயிலாய் இன்று அனுப்பி விடுகிறேன்.

..... விடிந்த் விட்டதா..? நேற்ற் ம்ன் தினம் அஸ்ஸெம்பிலி மீற்றிங். வீட் வந்த் சேர நேரமாகி விட்டத். வழமையில் வர்டத்தில் ஒர் நாள்தான் இப்படி அட்டகாசமாக இர்க்க்ம். ஆனால் இவ்வர்டம் எமத் பழைய தலைமையதிகாரி ஓய்வில் சென்ற் விட ப்திய தலைமையதிகாரி வந்த் ஒரே அட்டகாசம்தான். இத் இவ்வர்டத்தின் மூன்றாவத் அட்டகாசமான அஸ்ஸெம்பிலி மீற்றிங். காரியதரிசியைத் தொடர்ந்த் தலைமையதிகாரியே கிறிஸ்மஸ் போனஸ், சம்பள உயர்வ், விட்ப்ப் விதிகள்...


உகர உயிர்மெய்யெழுத்துக்கள் வெறும் மெய்யாகி விட்டது. அதை அவர் சரி செய்து கொள்ளலாம். இழந்ததைப் பெற்றோம் என்று அவர் மகிழ்வாரா தெரியவில்லை. இருப்பினும் எனக்கு என்னவோ பெரியதாய் சாதித்து விட்டது போன்ற உணர்வு. அதனால் நான் மகிழ்ந்து கொள்கிறேன்...

24 November 2003

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 

"எல்லாம் கடவுளின் சித்தம்" என்றாராம் ஜெயலலிதா, தீர்ப்பைக் கேட்டவுடன். "எங்கம்மா தப்பே பண்ணலை, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு" என்று கழகத்தவர்கள் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனராம். இந்தச் சத்தங்களில், தீர்ப்பின் முக்கியப் புள்ளிகள் மறைந்து தான் போகும். இரைச்சல்களுக்கு நடுவே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

தீர்ப்பு பலர் எதிர்பார்த்தபடி அல்லது ஆசைப்பட்டபடி வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் உச்ச நீதி மன்றத்தை நான் மதிக்கிறேன். சுதந்திரமாய்ச் செயல்பட்டு மக்களாட்சிக்கு நமது நாட்டு நீதி மன்றங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. அது இன்று வந்த டான்சி தீர்ப்பைத் தாண்டியும் நிலைத்து நிற்கும்.

உச்ச நீதி மன்றம் இன்று என்ன கூறியது ? "ஜெ. நிரபராதி என்பதில் சந்தேகமே இல்லை" என்று அது கூறவில்லை. "அவர் மீது சாற்றப் பட்ட குற்றம் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை. அதனால், அவரை விடுதலை செய்து உயர்நீதி மன்றம் வைத்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்" என்றது. அவ்வளவே. மேலும், "அவர் குற்றம் செய்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழ இடம் இருக்கிறது (அந்தச் சந்தேகம் மட்டுமே குற்றத்தை உறுதி செய்யப் பற்றாது என்றாலும்), அப்படி ஒரு காரியத்தைப் பொது வாழ்வில் இருக்கிற ஒருவர் செய்திருக்கக் கூடாது" என்று கண்டனம் தெரிவிக்கிறது. அவருடைய மனசாட்சிக்கு அவரே பதில் சொல்லிக் கொள்ள வேண்டும், இது பற்றி யோசித்துப் பார்க்கவேண்டும். பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று எல்லாம் கூறி இருக்கிறது.

நான் ஒரு தவறு செய்கிறேன் என்றால், அது யாரும் பார்க்காததால், யாரும் நிரூபிக்க முடியாது என்பதால் தவறு இல்லை என்று ஆகிவிடாது. இது தான் முக்கியத் தீர்ப்பு. குற்றவாளி அல்ல என்பதல்ல. குற்றம் முழுமையாக நிரூபிக்கப் படவில்லை என்பது தான். தனி ஒரு மனிதனாக இந்த வழக்கைக் கவனிக்கும் போது, எனக்கு இந்த வழக்கைப் பற்றிய விவரங்களோடு கூடவே பிற செய்திகள், நடவடிக்கைகள், நாட்டு நடப்புக்கள், போன்ற பிறவற்றையும் (circumstantial evidence) கவனிக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் என் மன நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்மாணிக்கிறது. ஆனால், நமது நாட்டு நீதி மன்றங்களுக்கு அந்தச் சுதந்திரம் கிடையாது. இருக்கவும் கூடாது. தனக்கு முன் வைக்கப் பட்ட ஆதாரங்களையும் வாதங்களையும் வைத்துத் தான், அதன் அடிப்படையில் அது முடிவு செய்ய வேண்டும். அதை விட அதிக சுதந்திரம் இருப்பின் அது தவறுதலாகப் பயன்படுத்தப் படும் அபாயம் இருக்கிறது. (இல்லை என்று சொல்லாதீர்கள் - பொடாவைப் பாருங்கள்!). குற்றம் சாட்டப்பட்டவரின் கீழேயே அரசு வழக்கறிஞராக இருந்து ஒருவரால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? அதோடு வழக்கு சம்பந்தமாக சில மாற்றங்கள், சாட்சி மிரட்டல்கள் இவற்றைச் செய்யும் அளவிற்கு ஒருவருக்கு சக்தியைத் தரக்கூடிய பதவி நாற்காலியை ஓட்டுப் போட்டும், ஓட்டுப் போடாமலும் அவருக்குத் தாரை வார்த்ததும் நாம் தானே !

எனக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. ஒன்று, மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளட்டும் என்று கருத்துக் கூறியிருக்கிறார்களே... உண்மையிலேயே அது பயன் தரும் என்று நீதிபதிகள் நம்புகிறார்களா ? ஒருவேளை குற்றத்தை உறுதி செய்யப் போதுமான ஆதாரம் இல்லை, ஆனாலும் ஒரு சந்தேகம் இருக்கிறது என்பதன் மூலம் அவர் முழுமையான நிரபராதி இல்லை என்று மறைமுகமாக மக்களுக்குக் காட்டி நீதிமன்றங்களின் மீதான் நம்பிக்கை குறையாமல் இருக்க ஒரு முயற்சியாக இருக்குமோ ?

இரண்டு, வழக்கு முடிந்து ஓராண்டிற்கும் மேல் ஆன பிறகே இந்தத் தீர்ப்பு வரக் காரணம் என்ன ? ஒரு வருடமாக நீதிபதிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லையா ? காலம் கடந்த நீதி என்பது அநீதிக்கு ஒப்பாகும் தானே. இப்படி முடிந்த வழக்குகளின் தீர்ப்புப் பல மாதங்கள் கழித்து வருவது வாடிக்கையானது தானா ? என்ன காரணம் ? விவரம் அறிந்தவர்கள் தெரியப் படுத்துங்கள். அரசியல் நிர்ப்பந்தங்களும் காரணங்களும் இப்படி ஒரு தாமதத்திற்குக் காரணம் என்று என்னால் நம்பப் பிடிக்கவில்லை. நீதி மன்றங்கள் இன்னும் சுதந்திரமாய் இருக்கின்றன என்று நம்புவதில் ஒரு பாதுகாப்பு உணர்வு இருக்கிறது. அதை நான் இழக்க விரும்பவில்லை.

இன்னும் மிச்சம் எட்டு வழக்குகள் இருக்கின்றன என்று பத்ரி பட்டியல் இட்டிருக்கிறார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். சுப்ரீம் கோர்ட் இன்னும் சிறிது நாட்கள் கழித்தாவது (சரியான வழக்கில் சரியான காரணங்களுக்காகக்) கொல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்கே நேரம்? 

எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவு நேரம் தான். இருப்பினும் சிலரால் மட்டும் எப்படி நேரத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது? எடுத்த காரியத்தை எண்ணியபடி செவ்வனே செய்ய முடிகிறது? அந்தக் குழுவில் சேர எனக்கும் விருப்பம் தான் என்றாலும் அதற்கு வேண்டிய தகுதியை நான் இன்னும் பெறவில்லை என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் "நேரமே இல்லை" என்கிற சாக்கை நான் பயன்படுத்துவது இல்லை. "நேரத்தை என்னால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை" என்று வேண்டுமானால் கூறுவது உண்டு. நேரத்தோடான எனது போட்டியில் நான் எப்போதும் பின் தங்கியே இருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், துவண்டுவிடாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க நான் முயல்கிறேன். முயற்சிகளில் மட்டும் நான் எப்போதும் தோற்பதில்லை.

தனது நூறாவது வலைப்பதிவை வெங்கட் இந்த வாரம் தொட்டுவிட்டதாகக் கொடியேற்றியிருக்கிறார். பெரும் சாதனை தான். ஒரு வலைக் குறிப்பு எழுத எத்தனை நேரம் ஆகிறது என்பதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தபடியால் அந்தச் சாதனையின் சிறப்பு இன்னும் தெளிவாய்த் தெரிகிறது. பல தமிழ் வலைக் குறிப்புக்கள் ஆரம்பிக்கும் போது இருக்கும் சுறுசுறுப்பைச் சிறிது நாட்களிலேயே இழந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அப்படி ஒரு குழியுள் விழுந்து விடாமல் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்யப் போகிறேன்.

எழுதுவதற்கு உந்துதலாய் இருப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று, தமிழ். இரண்டாவது, தொழில்நுட்பம். முதலாவது தமிழில் நன்றாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை. நல்ல எழுத்தாளராக வர விரும்புவர்கள் நிறைய எழுத வேண்டும், தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். சுஜாதா அப்படிக் கூறியதை எங்கோ படித்ததாய் ஞாபகம். ஜெயமோகன் கூறியதாய் வெங்கட் மேற்சுட்டிய குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெயமோகன் பெரும் இலக்கியவாதியும் எழுத்தாளரும் என்று பல இடங்களில் சமீபத்தில் பார்த்தேன் (கூடவே அதற்கு எதிர்வாதங்களும்). சமீபத்திய கருணாநிதி சர்ச்சைக்கு முன் ஜெயமோகன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது !

இரண்டாவது உந்துதல் - இந்த முயற்சியில் ஈடுபடும் போது இது தொடர்பான பலவகையான தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புக்கள். வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்களோடு ஓரளவு பரிச்சயம் செய்து கொள்ளும் ஆர்வம். இந்த வலைக் குறிப்புக்கள் ஆரம்பித்த பின் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். "...கல்லாதது உலகளவு" என்பதைப் போல இன்னும் எத்தனை எத்தனை நுட்பங்கள். விளிம்பில் நின்று விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

கணிணி முன் அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாகி விட்டது என்று இது ஒரு போதை போல் ஆகிவிட்டது என்று குற்றம் சாட்டும் மனைவியின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ம்ம்ம்... இது ஆரம்ப கால அமைப்பு முறைக்குக் கொடுக்கும் சிறு விலை என்று எனக்கு நானே காரணம் கூறிக் கொண்டேன். ஒரு செயல் (process) புதிய நிலைக்குச் (setpoint/operting region) செல்லும்போது ஆரம்பத்தில் மேலும் கீழுமாக (oscillations) இருப்பது இயற்கை தான். காலப் போக்கில் தனது இலக்கை, ஒரு சீர் நிலையை அது அடைந்து விடும். அதுவரை சமநிலையில் இருந்து விலகீடுகள் அதிகமாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

20 November 2003

கணிணியில் தமிழ் வந்த வழி - ஒரு பயனர் அனுபவம் 

மீண்டும் வரலாற்றுப் பாதையில் ஒரு சிறு பயணம். இது கணிணியில் தமிழ் வந்த வழி பற்றிய ஒரு பயனர் பார்வை. இன்று கணிணிகளில் பரவலாகிக் கொண்டிருக்கிற தமிழ் வடிவங்கள் பற்றி முன்னர் எழுதி இருந்தேன். ஆரம்ப நாட்களில் தமிழைக் கணிணிகளில் காணவும் உள்ளிடவும் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பட்ட பாடுகளையும் திசைகளின் ஆரம்ப இதழில் ஒரு பிரசவ வலிக்கு ஒப்பிட்டிருந்தார் கண்ணன். என்னுடைய பங்கு ஒரு பயனர் என்கிற அளவில் அவர்கள் பெற்றுத் தந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடுவது மட்டுமாகத் தான் இருந்தது.

நினைவு மறப்பதற்குள் இந்த முயற்சிகள் சரித்திரப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோடி காட்டிவிட்டு அவர் "தொன்று நிகழ்ந்தனைத்தும்" கட்டுரைத் தொடரில் வேறு பலவற்றைப் பற்றிப் பார்க்கச் சென்று விட்டார். ஒரு முழுமையான விரிவான சரித்திரப் பதிவு செய்யும் அளவு என் ஞானமோ அனுபவமோ அமையாததால் அந்தக் கருத்தை ஆமோதிப்பதோடு நின்று விடுகிறேன். தமிழ் இணைய மாநாடுகளிலும் இன்னும் பிற ஊடகங்களிலும் இவற்றைப் பற்றிய விலா வாரியான தகவல்கள் ஒருவேளை கிடைக்கக் கூடும்.

ஆனாலும் ஒரு பயனர் என்கிற அளவில் என்னுடைய குறுகிய அனுபவத்தின் அடிப்படையில் சில குறிப்புக்களை இங்கு கிறுக்குகிறேன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் கல்லூரி மாணவனாய் இங்கு வந்திருந்த சமயம், இணையம் வலைப்பின்னல்கள் இல்லாத வெறும் பின்னணித் தொடர்பு முறையாய் ஆரம்பித்து வளர்ந்து வந்த நேரம். DOS இயங்கு தளம் கூட இன்னும் முழுமையாய் மறையாத நேரம். கணிணியில் தமிழுக்கு நான் அறிந்த முதல் செயலி - கனடாவைச் சேர்ந்த Dr. ஸ்ரீனிவாசனின் 'ஆதமி' என்னும் DOS-இல் அமைந்த ஒரு மென்பொருள். FTP எல்லாம் செய்து (!) அதை இறக்கிக் கொண்டது பெரும் சாதனையாக இருந்தது.

aadhami vinayagar jpgஆதமியில் தனியாக ஒரு எழுத்துரு என்று எதுவும் இருக்கவில்லை (பின் ஆண்டுகளில் ஒரு TTF எழுத்துருவை அவர் உருவாக்கினார் என்று எண்ணுகிறேன்). அதனால் வேறு எந்த செயலியோடும் பயன்படுத்த முடியாது. அந்தச் செயலியின் மேல்பகுதியில் ஆங்கிலத்தில் தட்டச்சி ஒரு Fn Key-ஐ அழுத்தினால் கீழே தமிழில் தெரியும். ஆனாலும், சில படங்கள் (அழகாய் ஒரு விநாயகர்), மற்றும் கோலங்கள் போன்ற கொத்துக்களை அது உள்ளடக்கி இருந்தது.

அதன் பிறகு மயிலை, X-Tamil/libtamil/Tex/LateX/WnTamil, மதுரை முதலியவற்றைப் பற்றிச் சொல்லலாம் என்றிருந்தேன். Dr. கல்யாண் அதை இங்கே அருமையாகத் தொகுத்து வைத்திருக்கிறார். அதனால் நான் விட்டு விடுகிறேன்.

சில படங்கள் மட்டும் இங்கே...

மயிலை எழுத்துருக் கொண்டு அமைக்கப் பட்ட இந்தத் திருமண அழைப்பு 1996ல் அமைக்கப்பட்டது. எங்களுடையது தான் ! vasantha azaippu jpg

Soc.Culture.Tamil என்னும் பயன்வலைச் (UseNet) செய்திக் குழுமத்தில் ஒரு பதிவில் மதுரை முறை கொண்டு அச்சிட்ட என் கையொப்பம்.
madurai sample jpg

18 November 2003

மூ.எ.சு 

கடந்த சில வருடங்களாக ஆங்கிலத்தில் தொழில்நுட்பச் சமாச்சாரங்கள் பலவற்றை மூன்று எழுத்துச் சுருக்கங்கள் (மூ.எ.சு) வரும்படி பெயர் வைத்து வழங்குவது பிரபலமாகி வருகிறது. உதாரணத்திற்கு OLE, COM, OPC, CPU, FTP, GNU, URL, URI, OOP, FAQ... இப்படிப் பல. இவ்வாறு பெயர் வைப்பதைக் குறிப்பிட (சந்தேகமே வேண்டாம்) TLA என்று இன்னொரு மூன்றெழுத்துப் பெயர் - Three Letter Acronym !

ஆங்கிலத்தில் சுமார் 17, 576 மூ.எ.சு. பெயர்கள் சாத்தியமாம் (26^3). 700க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பெயர்களை இந்த அகராதி தொகுத்துத் தருகிறது. வட்டத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினால், எல்லாச் சாத்தியங்களும் உலகத்தின் எந்த மூலையிலாவது ஏதோ ஒன்றிற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சில வேலையற்றவர்கள் தொகுத்து வைத்திருக்கிறார்கள் !! ஆகா... "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று பாடத் தோன்றுகிறதா ?

சரி... திடீரென்று என்ன இந்தப் பக்கம் என்று பார்க்கிறீர்களா ? புதிய பதிவுகளின் தொகுப்பு பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். வழியில் எங்கு பார்த்தாலும் ஒரே மூ.எ.சு வகையறா. RSS, RDF, RSD, XML-RPC, API... இப்படி. அதிலும் இந்த RSSன் கதை தான் அசத்தல். சுருக்கப் பெயர் வைத்தாயிற்று. ஆனால் விரிவான பெயர் என்ன என்று தான் ஒவ்வொருத்தர் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில: Rich Site Syndication, RDF Site Summary, Really Simple Syndication... பற்றாததற்கு version 0.90க்குப் பிறகு இரண்டு பிரிவுகள் பிரிந்து 0.91, 0.92, 0.93 என்று ஒரு பிரிவினரும், 1.0, 2.0 என்று இரண்டாவது பிரிவினரும் வளர்த்துக் (?) கொண்டு இருக்கிறார்கள் !!

இவையெல்லாம் ஒருபுறம் கிடக்க, RSS, ascii encoding முறையைக் கொண்டிருப்பதால், நமது போன்ற தமிழ் வலைப்பதிவுகளுக்குப் பெரிதாக உதவாது. இதனாலும், இன்ன பிற பிரச்சினைகளாலும் வேறு ஒரு specification உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் Atom API பற்றி வேண்டுமானால் படித்துப் பாருங்கள். எதிர்காலம் அங்கு தான் போய்க் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

15 November 2003

எப்படி ? 

'ஏன்', 'எதற்கு' என்று தலைப்பிட்டுச் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய பின் 'எப்படி' என்று ஒன்று பின்வர வேண்டும் என்பது தானே இயற்கையின் நியதி. அதனால் இதோ...

எப்படி எல்லாம் கணிணிகளிலும், அதன் திரைகளிலும் தமிழ் இன்று மிளிர்கிறது என்று எண்ணிப் பூரிப்பாய் இருக்கிறது. இணையமும், வைய விரிவு வலையும், மின்மடல்களும், செய்தி மற்றும் விவாதக் குழுக்களுமாகவும், வளர்கின்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றுடனும் இணைந்தும் ஈடு கொடுத்தும் தமிழ் நிலைத்து வந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இன்று வலைப்பதிவுகள், எழுத்துருக்கள், தானிறங்கி முறைகள், எழுத்துருக் குறியீட்டு முறைகள், பல்வகைச் செயலிகள், நிரல்கள், உலாவிகள், இணைய தளங்கள், என்று சீர் நிறைந்து கிடக்கிறது. பனையோலைகளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்த என் பாட்டன் முப்பாட்டன் காலத்துத் தமிழ் இன்று மின் அணுக்களின் மீதேறி அதிவேகப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அந்தப் பழைய பனையோலைகளையும் காத்து அழைத்துச் செல்லவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
jpg image of panaiyOlai
நன்றி: முதுசொம் காப்பகம்
தமிழின் காலப்பயணத்தில் மிகமிகச்சிறு பங்கெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குள்ளும் பெருமை. இந்தத் தமிழ் வலைக்குறிப்புக்கள் அமைப்பது எப்படி என்று தெரிய வேண்டுமா ? பலரது உள்ளீடுகளோடு விரிவான உரைகளை மதி அமைத்திருக்கிறார். படங்களோடு விளக்கங்களைச் சுரதா தந்திருக்கிறார். பிற உதவிகளுக்கும் கேள்விகளுக்கும் ஒரு யாஹூக் குழுமம் இருக்கிறது. அங்கே அ.கே.கே பட்டியல் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) அமைக்க ஒரு முயற்சி பிறந்திருக்கிறது. அதை நிர்வகிக்கக் காசி முன் வந்திருக்கிறார்.

இந்த வலைப்பக்கத்தை யூனிகோட்டில் அமைக்கத் தேனீ என்னும் தானிறங்கி உருவைத் தானம் தந்திருக்கிறார் உமர். உள்ளிட உதவும் செயலிகள் சிலவற்றை முரசு, பொங்கு தமிழ், எ-கலப்பை இவை தருகின்றன. UnicodeTamil.Kmx என்னும் தட்டச்சு செலுத்தியையும் பெற்றுக் கொண்டால் வசதி. எழில் நிலா பக்கம் சென்றால், பல செயலிகளை இறக்கிக் கொள்ளலாம். அதோடு தமிழ் யூனிகோடு முதலியன பற்றிச் சுவாரசியமான பல கட்டுரைகளையும் பார்க்கலாம். இலங்கையின் அழகுத் தமிழில் ஒரு ஒலி விவரணக் குறும்படம் இதைப் பற்றி அழகாக விவரிக்கிறது. அங்கே சுரதா தானிறங்கிகளைப் பற்றியும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

பலவாறாகச் சிதறிக் கிடந்த குறியீட்டு முறைகள் யூனிகோடு/தகுதரம்/த.நா.அரசு முறை TAB/TAM என்று இந்த மூன்றைச் சுற்றி ஒரு முதிர்நிலை பெறத் தொடங்கி உள்ளன. காலப்போக்கில் இவை இன்னும் ஒன்றுபட்டுப் போகும். நல்ல திசையே தெரிகிறது. இதற்காகப் பாடு பட்டவர்களுக்கெல்லாம், பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் நன்றி. அதில் பலபேர் உத்தமத்தில் பொறுப்பு வகித்தும், பங்கு பெற்றும் தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

பல திசைகளில் சென்று கொண்டிருந்த குறியீடுகள் தமிழர்களின் வேற்றுமையைக் காட்டின என்னும் வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது எல்லோருக்கும் தாய்மொழி மீது இருந்த பற்றையும் அளவில்லா ஆர்வத்தையும் தான் காட்டியது என்பது என் எண்ணம். அவை ஒரு ஒருங்கிணைந்த திசையை நோக்கி இப்போது சென்று கொண்டிருப்பதும் நமது ஒட்டுமொத்த முதிர்ச்சி நிலையையே காட்டுகிறது. தற்போதைக்கு மூன்று முறைகளுக்கும் ஏதோ ஒரு பயன் இருக்கத் தான் செய்கிறது. எட்டு பிட்டில் (8-bit) உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் அடக்கிய TAM அச்சுத் தமிழுக்கு உதவலாம். காலப்போக்கில் அச்சுலகம் மின்னுலகமாக மாறிவிடும் சாத்தியம் இருப்பதால் இதன் பயன் குறைந்து போகலாம். கணிணியுலகம் இன்னும் எட்டு பிட்டில் இருப்பதால், பல நேரங்களில் தகுதரம் (TSCII) நமக்கு அவசியம். உதாரணத்திற்கு யாஹூ குழுமங்களில் இன்னும் தகுதர எழுத்துக்கள் தான் சுலபமாகப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்பம் வளர்ந்து பதினாறு பிட்டுக்குப் போகும் போது நாமும் உலகத்தோடு ஒன்றிப் பின்னெப்போதும் யூனிகோட்டையே பயன்படுத்தலாம்.

அந்த யூனிகோட்டில் தமிழுக்கு ஒதுக்கி இருக்கும் இடத்தில் மாற்றம் தேவையா இல்லையா என்கிற அடுத்த களம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கருத்துப் பேதங்கள் ஆரோக்கிய வளர்ச்சிக்கு அவசியம். தனது பயணத்தின் அடுத்த நிலைக்குச் செல்லத் தமிழ் தயாராகத் தான் இருக்கிறது. வாழ்க !

12 November 2003

புதிய பதிவுகளின் தொகுப்பு 

இந்த வாரம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு அளிக்க வேண்டியிருப்பதால், அதிக நேரம் வலைக்குறிப்புக்களின் பக்கம் வர முடியவில்லை. வந்த சிறு நேரம் பலரின் தளங்களில் புதுப்பதிவுகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதில் கழிந்தது. Weblogs போன்று தமிழ் வலைக்குறிப்புக்களில் புதிய பதிவுகளைத் தொகுத்து வழங்கும் தளம்/செயலி ஒன்றை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் சிந்திக்க வேண்டும். (இல்லையெனில் என் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு நானே இந்த முயற்சியில் இறங்கி விடும் அபாயம் உள்ளது).

09 November 2003

ஓரிசு 

தளம் மாற்றி இங்கு வந்தாயிற்று. இருந்ததெல்லாம் இங்கு எடுத்துப் போட்டாயிற்று. இன்னும் "ஓரிசு" பண்ணலை. (புரியாதவர்களுக்கு - ஒழுங்கமைப்புச் செய்யவில்லை). இந்த "ஓரிசு" என்கிற கொங்குத் தமிழ்ச்சொல் எங்கிருந்து வந்தது, பதவேர் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

எல்லாத்தையும் கண்டபடி எறிஞ்சிட்டுப் போகாதடா, ஓரிசா எடுத்து வச்சிட்டுப் போ


என்று எங்களூர் அம்மாக்கள் பெத்ததுகளைத் திட்டுவது மிகவும் சாதாரணமானது.

கொஞ்சம் பொறுமை. விரைவில் இந்தத் தளத்தைச் சீரமைத்து (ஓரப் பகுதி இணைப்புக்கள், இத்யாதி...) விடுகிறேன். வழியிலே புதிதாய் CSS போன்றவை கண்ணில் பட கொஞ்சம் தடம் மாறி விட்டேன்.

அட ! Word rootக்குப் "பதவேர்" - நல்லா இருக்குங்களா ?

காசி... updateக்கு நீங்களும் தமிழ் தேடிக்கிட்டே இருக்கீங்க, யாரும் ஒண்ணும் சொல்லலை போலிருக்கு. நான் வேணும்னா ஆரம்பிச்சு வைக்கிறேன். "மேல்விவரம்" எப்படி? ஒத்துவரலீன்னா விட்டுருங்க.

06 November 2003

எதற்கு ? 

முதலில் இதோ தண்டூராச் சத்தம். டகர டகர டகர டகர டும்...

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதோ நானும் என் வலைப்பதிவுகளோடு வந்துவிட்டேன். குறைந்தது நான்கு நாட்களாவது எழுதினால் தான் வெளியே சொல்வது என்று ஒரு சுய இலக்கு வைத்திருந்தேன். அதை வெற்றிகரமாக அடைந்துவிட்டதால் இந்த அறிவிப்பு.

வயதில், அனுபவத்தில், ஆற்றலில், அறிவில், முயற்சியில், சிந்தனையில் மிகப் பெரியவர்களெல்லாம் இந்த வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்த சிலரை இங்கே தனியாய்ச் சுட்டி இருக்கிறேன் (பிடித்தவை பகுதி பார்க்க). பெரும் முழக்கத்தோடு கலக்கிக் கொண்டிருக்கும் அவர்களை எல்லாம் தாண்டி இங்கே என் சிறிய மூலைக்கு நீங்கள் வர நேர்ந்தால், வணக்கம். வாருங்கள் - என் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு இந்த எழுத்துக்களோடு சற்று உறவாடி விட்டு உங்கள் கருத்துக்களைத் தந்து விட்டுச் செல்லுங்கள். நன்றி.

எதற்காக இந்த வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? என் மனைவி கூட நேற்று என்னிடம் இதைக் கேட்டாள். எழுதுவதன் பால் எனக்கு இருந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள இந்த வலைக்குறிப்பு வடிவம் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்திருக்கிறது. ஏதேதோ எண்ணங்களும் கிறுக்கல்களுமாக எழுதும் குறிப்பு வடிவத்திற்கும் இது நன்கு ஒத்துப் போகிறது. இந்த எண்ணங்கள் கால வெளியில் கரைந்து போகிற வெறும் கரும்புகையாய் மட்டுமே போய்விடாமல், வாழ்க்கைப் பயணத்தின் வழித்துணையாய் வருவதைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இது.

சுமார் இருபது வருடங்களாக விட்டு விட்டு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இருந்து வருகிறது. (இப்போது அது வாரக்குறிப்பு, மாதக்குறிப்பு, வருடத்தில் அஞ்சு குறிப்பு என்றாகி விட்டது என்பது வேறு விஷயம் ! ). எதற்காக என்று சில சமயம் என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. சரியான விடை தெரியாவிட்டாலும், அவ்வப் போது தொடர்ந்து எழுத இன்னும் முயற்சிப்பதுண்டு. பல வருடங்களுக்கு முன்னர் (பள்ளியில் படிக்கையில் ஒரு குயர் நோட்டில்) எழுதியது படிக்கும் போது வியப்பாக இருக்கும். அது மறந்து விட்டிருக்கும் சில நினைவுகளைத் தூண்டிவிடும். அந்த நினைவுகள் நிரந்திரமாகத் தொலைந்து போகாமல் இருக்க அந்தக் குறிப்புக்கள் உதவி இருக்கின்றன. அது போலவே இந்த வலைக்குறிப்புக்களுக்கும் ஒரு பயன் இருக்கக் கூடும். எனக்கு மட்டுமே சொந்தமான நாட்குறிப்புக்கள் போல் இல்லாமல், இந்த வலைக்குறிப்புக்கள் என் (பழைய, புதிய) சொந்தங்களுக்கும், நட்புக்களுக்கும் அப்படி ஒரு பயனை அளிக்கக் கூடும்.

மாதம் தவறாமல் கடிதம் எழுதுகிறேன் என்று மாதம் தவறாமல் வாக்குக் கொடுத்து விட்டுத் தவறி விடுகிற ஒரு பெருமகனைப் பெற்றெடுத்தவள் என்றேனும் நினைத்துக் கொண்டால் அவன் கிறுக்கல்களைப் படித்துப் புளகாகிதம் அடைவதற்கு இது உதவக் கூடும்.

பெற்ற தந்தையின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திற்காகவே என் இளம் சிட்டுக்கள் இருவருக்கும் தமிழ் கற்றுக் கொள்ளும் உந்துதலை இது கொடுக்கக் கூடும்.

கல்யாணத்திற்கு முன்னாறு மாதங்கள் கடிதங்கள் மூலமே காதலை வளர்த்துக் கொண்டவனின் எழுத்துக்களை இப்போது படிக்க முடியவில்லையே என்று ஏங்கி இருப்பவள் (நினைப்பு தான்!), "ஏன்ப்பா நீ ஏதாச்சும் எழுதலாம் இல்லே, நீ நல்லா எழுதுவே"என்று ஊக்குவித்தும், பிறகு, "எங்கே என்னவோ எழுதறேன் எழுதறேன் என்று என்னோடு இராமல் ஓடி விடுகிறாய் ? "என்று குறை பட்டுக் கொண்டும் இருப்பவளுக்கும் இது ஒரு இனிமையைத் தரக் கூடும்.

இன்றில்லை எனினும் ஒரு நாள்... இன்னொரு நாள்...


05 November 2003

பாபா - ஒரு குழந்தைகள் படம் 

baba.jpgசென்ற வாரத்தில் பார்த்த பாபா படத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. எல்லோரும் 'பாய்ஸ்' பட விமரிசனம் எழுதிக் கொண்டிருக்கும் போது 'பாபா' என்கிற அரதப் பழைய படம் பற்றி எழுதுகிறேனே என்று பார்க்காதீர்கள். நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ! (இது ஒரு பாபா வசனம் :-)). ஏற்கனவே பல விமர்சனங்கள் படித்திருந்ததால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் பார்க்க அமர்ந்தோம். ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும் பார்ப்பவர்களின் அந்த நேர மனநிலையையும், அது உண்டாக்கும் விளைவுகளையும் பொருத்தும் அமைகிறது என்பது என் எண்ணம். அந்த கண்ணோட்டத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், அமெரிக்காவில் வளரும் என் ஐந்து வயது மகள்.


தமிழ்ப்படம் என்றாலே 'boring' என்று எழுந்து சென்று விடும் அவள், இந்தப் படத்தை ஆர்வமாய்ப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தாள். கூடவே அமர்ந்து 'இப்போ என்ன ஆச்சு? இப்போ என்ன பேசராங்க ?' என்று கேட்ட அவளிடம் விரிவாய் விளக்கிக் கொண்டிருந்தும் நான் படத்தில் எதையும் இழக்கவில்லை. அவளுடைய கேள்விகளுக்கு செவி மடுத்துப் பதில் இறுக்கும் சமயம் எதையாவது இழந்து விடுவோமோ என்று கருதும் அளவிற்கு அங்கு நடிப்பு, வசனம், கதை என்று பெரிதாய் ஒன்றும் இல்லை. அதனால் ஒரு சுய ஆர்வத்தோடு அவளுக்குச் சொந்தமாய் நானே கொஞ்சம் கதை விட்டுக் கொண்டிருந்தேன். படத்தில் வரும் மாய மந்திரங்களை விளக்க அவள் அறிந்த 'The Wizard of Oz' என்கிற ஆங்கில டுமீல் கதையோடு கொஞ்சம் ஒப்பீடு. சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் வர்ணனை என்று நான் கலந்தடிக்க அவள் பெரிதும் மகிழ்ந்து போனாள். அடுத்தது என்ன தமிழ்ப் படம் பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறாள். அப்படி அவளுடைய ஆர்வத்தைத் தூண்டிய இது ஒரு நல்ல (!) குழந்தைப் படம் தானே...


மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்று ஒரு வலைப்பதிவில் பரி எழுதி இருந்தார். அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. எங்கு இருந்தாலும் தாய்மொழி அறிவு அவசியம் என்று கருதுவதால் எம் மக்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க முனைந்து கொண்டிருக்கிறோம். பாபா வழியாகச் செல்ல வேண்டியிருந்தால் என்ன ? அந்த இலக்கு தானே முக்கியம்.


அடுத்தது 'அருணாச்சலா' கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்...


03 November 2003

சூனியக்கிழவிகளும் மிட்டாய்களும் 

ஹாலோவின் - என்னவோ ஒரு பூசனிக்காய்த் திருவிழா, சென்ற வெள்ளியிரவு சுமார் இரண்டு மணி நேரம் எங்கள் தெருவே கொஞ்சம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்க நன்றாகத் தான் இருந்தது. சாதாரணமாய், இருட்டுக்குத் துணையாய் நிற்கும் ஒற்றை விளக்குக் கம்பங்களும், இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் நிறம் மாறிய மரங்களும் தவிர வேறு நடமாட்டங்கள் அதிகம் இல்லாத இளங்குளிர்காலத்து சாலை, அன்று விதம் விதமாய் வேடங்கள் அணிந்தபடி வீட்டுக்கு வீடு திரிந்து மிட்டாய் வேட்டை ஆடிய சிறார்களைச் சுமந்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தது.

எங்கள் வீட்டுப் பொடிசுகள் இரண்டும் சூனியக்கிழவிகளாய் மாறி என்னைப் பயமுறுத்துவதில் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் சந்தோஷம் தான் எவ்வளவு எளிமையானது... நான் பயந்த மாதிரி நடிக்கிறேன் என்று தெரிந்த போதும் அது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது ! ஏன்... "அப்பா, இன்னும் கொஞ்சம் பயந்த மாதிரி நடியுங்கள்" என்று கேட்டுக் கொண்டு என் நடிப்பில் மகிழ்கிறார்கள். (இல்லை, அவர்கள் இன்னும் அவ்வளவு தெளிவாய்த் தமிழ் பேசுவதில்லை!)
halloween ghost.jpg

தாயுடன் கிளம்பி இந்தப் பேய்த்திருவிழாவை (அப்படித்தான் சிலர் இதை வலையில் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்கள்) ஒட்டி ஒரு சுற்று மிட்டாய் வசூலுக்கு அவர்கள் சென்றுவிட, வருவோர் போவோருக்கு வீட்டில் இருந்து இனிப்பு விநியோகம் செய்வது என் வேலை என்று தீர்மானமாகியிருந்தது. சிறியது பெரியது என்று பல வயதுக்காரர்கள் வந்து போனார்கள். சிலரைப் பார்த்தால், ஒரு வயது உச்ச வரம்பும் (முக்கியமாய் எடை உச்ச வரம்பும்) இருக்க வேண்டும் என்று தோன்றியது. வந்திருந்த சிலர் ஊதினால் நான் கீழே விழுந்துவிடுவேன் போலிருந்தது. இத்தனை இனிப்பும் உள்ளே போய் அடுத்த வருடம் இன்னொரு சுற்றுப் பெருத்து விடுவார்கள். (அப்போது ஊத வேண்டியது இல்லை, மூச்சு விட்டால் போதும். நான் டணால் !!)

வந்தவர்கள் அணிந்திருந்த வேடங்கள் பார்க்கச் சுவாரசியமாக இருந்தது. சூனியக் கிழவிகள், எலும்புக் கூடுகள், பேய்கள், நடமாடும் பிணங்கள் என்று இந்த நாளின் சிறப்பை (!) ஒட்டிய பல வேடங்கள். இன்னும் பூனை, ஆனை, பூச்சி என்று இன்னொரு வகை. இளவரசிகள், பாட்டுப் பாடும் அழகிகள் (மன்னிக்க, எனக்கு ப்ரிட்டனி, க்றிஸ்டினா வித்தியாசம் எல்லாம் நிஜமானவர்கள் வந்து நின்றாலே தெரியாது), என்று இன்னொரு வகையறா. இன்னும் சிலர் இதுக்கும் சோம்பல் பட்டுக் கொண்டு சும்மா சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்து நின்றார்கள். எத்தனை வகை வேடங்கள் ! (நம்புவீர்களா தெரியவில்லை - கழிவறை மாதிரி எல்லாம் வேடம். ஐயா !)

என் இனிய சூனியக் கிழவிகளின் இரண்டு கூடை மிட்டாயோடு, வீட்டில் மிச்சமான இன்னொரு கூடையும் சேர்ந்து கொண்டது. அதிக இனிப்புக்கள் நல்லதல்ல என்பதால் குழந்தைகளின் கண்களில் இருந்து விரைவில் அவை மறைந்து போகும். சென்ற வருடமும் இப்படித் தான். அப்போது மறைத்த மிட்டாய்கள் வீணாய்ப் போய்விடக் கூடாதே (எவ்வளவு அக்கறை) என்று அவ்வப்போது அவை என்னோடு அலுவலகம் வந்து விடும். சென்ற வருடாந்திரப் மருத்துவப் பரிசோதனையில் எகிறிப் போன என் cholesterol, triglycerides இவற்றிற்கெல்லாம் இவை தான் காரணமென்று இவ்வருடம் அவற்றை என் கண்களில் இருந்தும் மறைத்து விட்டாள் என் இல்லத்து அரசி.