<$BlogRSDUrl$>

என் எண்ணக் கிறுக்கல்கள்...!

Tamil blogs of Selvaraj in Unicode format

05 December 2003

போவோமா ஊர்ப்பயணம்... 

வருடா வருடம் ஊர் போகத் தான் ஆசை. ஆனால், பல வருடங்களுக்குப் பின் தான் இப்போது செல்லும்படி அமைந்து விட்டது. பற்பல காரணங்களால். நாளை கிளம்பும் முன் இன்னும் பெட்டி கட்டாமல் இம்முறை அப்படி ஒரு அவசரம், மும்முரம் வேறு. அதனால் ஊர் செல்லுகின்ற தாக்கம் இன்னும் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் இறங்கும் போது முகத்தில் வந்து மோதப் போகிற இந்தியக் காற்றுத் தான் பரவசத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதன் பிறகு சென்னை வழியாய்ச் சென்று, கடைசிக் கட்டத்தில் இரயில் வழியாய் ஈரோடு போய்ச் சேரும் போது மொத்தமாய் இங்கிருந்து (க்ளீவ்லாண்டு) கிளம்பி 45 மணி நேரம் ஆகியிருக்கும். பிள்ளைகள் ரெண்டும் பெட்டிகள் நான்குமாய் போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க மாட்டோம் என்று எண்ணுகிறேன். சோர்வான பயணமாக இருந்தாலும் சுகமான இலக்கு என்பதால் அலுப்பேதும் தெரியாது.

அகலக் கால் வைப்பது எனக்கு ஒரு பழக்கமாகி விட்டது. இந்த வலைப் பதிவுகள் பக்கத்தை மேம்படுத்துவதில் சிறிது நாட்கள் ஈடுபட்டுப் பல திசைகளில் சென்று விட்டேன். HTMLல் இருந்து XHTML பக்கமாய் மாற்ற முயன்றேன். Blogger விளம்பரப் பட்டை தவறாய் வருவதால் முழுமையாய்ச் செயல்படுத்த முடியவில்லை. கருத்துக்கள் வ.கே.கே.க்கு சிறிது சிறிது செய்திருந்தாலும் முழுமையாய் என் பங்கை முடிக்க முடியவில்லை. PHP அறிவு இல்லாததால் RSS செய்து முடிக்கவில்லை. இவையெல்லாம் ஏன் எதற்கு எப்படி என்பது உட்பட இனி எல்லாம் திரும்பி வந்து தான். ஊரில் இணைய வசதி வாய்ப்பு எப்படி என்று தெரியவில்லை. எதுவும் செய்ய முடியவில்லை எனில், இந்த வலைப்பதிவுகளும் இனி ஆறு வாரங்கள் கழித்துத் தான். ஆனால், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது பதிக்க முற்படுகிறேன்.

நீண்ட நாட்கள் ஊர் செல்லாமல் இருப்பவர்கள், கால்களில் கட்டியிருக்கிற சக்கரங்களைக் கழட்டி விட்டு ஒரு நிமிடம் நின்று யோசித்துப் பாருங்கள். தாமதமாவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் அங்கே காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் ஒரு நடை போய் வந்து விடுங்கள். முடிந்தால் ஒவ்வொரு வருடமும். எதுவும் செய்யவில்லை என்றாலும், பெற்றவளாவது சற்று மகிழ்ச்சியுறுவாள்.

பிறகு சந்திப்போம்.