30 October 2003
பத்தாயிரம் டாலர் பரிசு
நேற்று இரவு தமிழகத்தில் இருந்து நான் முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி தொலைபேசியில் அழைத்திருந்தார். என் அப்பாவிற்குத் தெரிந்த அரசு அலுவலகத்தில் அவர் வேலை செய்வதாகவும், அவர் தான் என் தொடர்பு எண் கொடுத்தார் என்றும் கூறவே, அதற்குள் யாரிந்தத் தொலைவிற்பனையாளரோ என்று என்னுள் ஏற்பட்டிருந்த எரிச்சல் சற்றே தணிந்தது. இல்லை, அமெரிக்க அரசின் 'என்னை அழைக்காதீர்' பட்டியலில் இன்னும் நான் என் பெயரைச் சேர்க்கவில்லை.விஷயம் இது தான். பொறியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவர் மகனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசு கிடைத்திருப்பதாகவும் அதனை மீட்டுத் தர உதவ வேண்டும் என்றும் அழைத்திருக்கின்றனர். மீட்டுத் தருவதா? ஒரு அவநம்பிக்கையோடு பேச்சைத் தொடர்ந்தேன்.
அமெரிக்காவில் வாழும் ஒருவர் தான் இதைப் பெற முடியுமாம் என்ற போது, இது உண்மையாய் இருப்பின் நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். பையன் இது இணையம் வழி வந்த பரிசு என்று, தனது பயனர் பெயர் (மின்மடல் முகவரி) மற்றும் கடவுச் சொல் இவற்றைத் தரத் தயாராக இருந்தான். நான் உள்ளே சென்று பரிசை மீட்டு அவர்களிடம் தர வேண்டும் என்பது விருப்பமாய் இருந்திருக்கலாம். (என்னை எப்படி நம்பினார்கள் என்று தெரியவில்லை!). அதெல்லாம் சட்டப்படி குற்றம் - இந்த ஆள் மாறாட்ட வேலை எல்லாம் சரியில்லை என்று கூறிவிட்டு, இருந்தாலும் சரி அப்படி என்ன தான் பரிசு என்று விசாரிக்கையில் பையன் ஏதோ ஒரு குப்பை மடல் வலையில் விழுந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. அவன் கொடுத்த முகவரியை உலாவியில் அடித்துப் பார்க்க - அது ஒரு ஆபாசச் சரக்குகள் விற்கும் தளம்.
இது போன்ற ஏமாற்று வேலைகள் நிறைய நடக்கும், நம்பாதீர்கள் என்று எசச்சரிக்கை தந்தேன். "நானும் படிச்சுப் பார்த்தேன் சார். Genuine-ஆகத் தான் தெரிந்தது. ஆனால் அந்தப் பரிசைப் பெற அமெரிக்கக் கடனட்டை எண் தர வேண்டும் என்றார்கள்"என்றார் அந்தப் பெண்மணி. எதை வைத்து அப்படி நம்பினார் என்று தெரியவில்லை. இல்லை, இது ஏமாற்று வேலை தான் என்று புரிய வைக்க முயன்றேன். என்னை நம்பினார்களா இல்லை இவன் உதவ மாட்டான் இவனிடம் என்ன பேச்சு என்று வைத்துவிட்டார்களோ தெரியவில்லை.
இணையம், கணிணி உபயோகங்கள் தமிழகத்தில் அதிகரிப்பது ஒரு புறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், மக்கள் இது போன்ற குப்பை மடல்கள் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதிருக்க விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. சென்னை போன்ற பெருநகர்களில் இந்த அறிவு அதிகம் இருக்கலாம். ஆனால் மற்ற மாவட்டங்கள், மற்றும் சிற்றூர்களில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பற்றிக் கற்றுக் கொடுப்பது யாருடைய வேலை? செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் ? இந்தியக் கடனட்டை எண்கள் உதவாத வரை பெரும் பிரச்சினைகள் இல்லை தான். இருப்பினும், இலட்சங்களைக் கட்டணமாக வாங்கும் சுயநிதிப் பொறியியற் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கேனும் இணையப் பொது அறிவை வளர்க்க வேண்டும்.
25 October 2003
முதலுரை
நல்ல நடையில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களைப் படிக்க எனக்குப் பிடிக்கும். படிப்பதோடு இருந்து விடாமல் படைப்பவனாகவும் ஆக வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. இதுநாள் வரையில் பெரியதாய் எதுவும் எழுதிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும், சிறிது சிறிது எழுதிய அனுபவங்களும், அதோடு முக்கியமாக, எழுத வேண்டும் என்கிற உந்துதலும் நிறையவே இருப்பதால், அவற்றை வைத்து என்னைச் செலுத்திக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில், இந்த வலைப் பக்கங்களில், என் எண்ணக் கிறுக்கல்களைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் விமரிசனங்களையும் தெரிவித்து ஆதரவளியுங்கள். நன்றி.முதலில், எல்லோருக்கும் வணக்கம். எனது பயணம் தொடங்கிய கொங்கு நாட்டுக் கொஞ்சும் தமிழில் கூறினால், "வணக்கமுங்க" !
சுமார் 2, 3 ஆண்டுகளுக்கு முன் இந்த வலைப் பதிவு வடிவம் பிரபலமாகிக் கொண்டு இருந்த போது எனக்கும் தமிழ் வலைக்குறிப்பொன்று அமைக்க வேண்டும் என்று ஆசை. வழிமுறை சரியாகத் தெரியவில்லை. சில தளங்களில் வேற்று மொழியில் அமைக்க அனுமதியும் தரவில்லை. பிறகு இந்த ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டேன் இத்தனை நாட்களாக. மிகச் சமீபத்தில் தான் தமிழ் வலைப் பதிவுகளே பரவலாக உருவாகி வருவதைக் காண முடிந்தது. இந்த 2, 3 மாதங்களாக நானும் உள்ளே குதித்து என் எண்ண அலைகளைப்(!) பரவ விட வேண்டும் என்று எண்ணியபடியே தான் இருந்தேன். ஆனால் செயல்படுத்தத் தாமதம் ஆகிக் கொண்டே போய்விட்டது.
பின்னணியில் இத்தனை நாட்களாக நிறைய வலைப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். (என் ஓட்டு வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டுக்கும் உண்டு. இன்னும் சிலரைப் போல, பூவில் எனக்கும் கொஞ்சம் தயக்கம். அவ்வளவாய் உடன்பாடு இல்லை). செயலிகள், எழுத்துருக்கள், தானிறங்கிகள், யூனிகோடு, தகுதரம் என்று பலவாரானவற்றைப் பற்றியும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில சோதனைகளும் செய்து கற்றுக் கொள்ளலாம் என்றும் சில பின்னணி வேலைகள் செய்து கொண்டிருந்தேன். நாலைந்து நாள் கழித்துத் தான் வெளியுலகிற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்று எண்ணிச் சோதனை வடிவத்தில் வைத்திருக்க அதற்குள் சிலர் வந்து பார்த்துப் பின்னூட்டமும் அளித்து விட்டனர். அதனால், இனியும் தாமதிக்கலாகாது என்று இதோ முடிவான என் முதலுரை.
கிறுக்கல்கள் தொடரும்...